என்னைப் பற்றி

எனது படம்
சுதந்திரம் யாசித்த மனசுகெல்லாம் கூண்டு வாழ்வு சொ ந்தமில்லை; கூண்டை வாழ்த்தும் சாதிக்கோ சுதந்திரம் அருகிலில்லை.

சனி, 27 நவம்பர், 2010

தாயே!

நாரின்றி பலகோடி முத்துக்கள் கோர்த்து,
பார்முழுதும் மழையென்று அருள்புரி(ந்)தாயே;

தூர்கட்டும் அன்பென்ற விரைகள் செழித்து,
ஊர்முழுதும் அழைப்பின்றி பரிசளி(த்)தாயே.

(உங்கள் மனநிலை சார்ந்தே மெல்லினம் உங்களுக்கு அர்த்தம் சொல்லும்)

சனி, 9 அக்டோபர், 2010

அன்பு!!!

"ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னம் காட்டென்று"

காந்தியவாதிபோல் பேசாதிருப்பினும்,

கன்னங்களிரண்டும் தப்புவதில்லை.

ஆனால் அவ்வலியிலும் எனக்கோர்

புரிதல் பிறந்தது.

உலகில் அன்பு மறைந்திருக்ககூடும்

என் உடலில் சற்றும் குறையவில்லை

கன்னங்கள் பழுதாக

கண்ணீரால் கன்னம் தீண்டி

என் கண்கள் சொன்னது

"கலங்காதே நண்பா ....

உன் வலியை நானும் உணர்கிறேன்" என்று.

சிலிர்த்தது நெஞ்சம்... சிரித்தது இப்பிரபஞ்சம்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

ஒரு கவிதையின் கவிதை!!!

எனை கவிதையாய் சுமந்த
காகிதமின்று இறந்தகாலம்

எனை வார்த்தைகளாய் வித்திட்ட
எழுதுகோலுக்கு ஏனோ எதிர்காலமில்லை

எனை வடிவித்த கவிஞனும்
என்முன்னே தோன்றவில்லை

எனை கீதமாக்க வினையும் இசையை
ஏந்திச்செல்ல காற்றுக்கு காவலா?

கீதமாக நான் பிறக்கமாட்டேனோ?
அந்த கவிஞனும் என்னை பாடமாட்டானோ?

காலமே!

சன்னல்கள் திறந்துவிடு
காற்றில் இசை தூதுவிடு

இது வேட்கையல்ல
வேண்டுகோள்!!!



உவமை விளக்கம்:

கவிதை - இளம் பெண்
காகிதம் - அவள் தாய்
எழுதுகோல் - அவள் தந்தை
காற்று - காதலன்
சன்னல் - காதலனின் பெற்றோர்
இசை - அன்பு

கவிஞன் - அது நானல்ல..... இயற்கை ( நீங்கள் கடவுள் என்றும் சொல்லிகொள்ளலாம் )

தாயை இழந்து தந்தையையும் இழக்கும் நிலையில் இருக்கும் ஒரு இளம் பெண், தன் காதலனின் பெற்றோர் மறுத்ததனால் திருமணம் செய்யவும் இயலாத தருணத்தில் - அவள் இதயத்தின் குரல் இந்த கவிதை.

திங்கள், 5 ஜூலை, 2010

நான் பெற்றெடுத்த செல்வமே!!!

ஆண்புள்ள பொறந்ததுன்னு
அப்பத்தா சேதிசொல்ல,
ஆண்டவன தொழுதுபுட்டு
ஆர்பாட்டம் செஞ்சபடி,
அன்போட தூக்கிகிட்டு
கண்கலங்க உயிர்சிலிர்க்க,
உன் காலடியில் முத்தமிட்டேன்.
உன் வயசு - ஒரு மணி நேரம்.

வெள்ளி கொடி கட்டிக்கிட்டு
வெகுளி சிரிப்பு சிந்திகிட்டு,
விழுங்காது துப்பாது
வாயிக்குள்ள சோறு வெச்சு,
வீட்டுக்குளே சிட்டெறும்பா
துருதுருன்னு ஓடிகிட்டு,
மணிகணக்கா உன் அம்மாவும்
சோறூட்ட துரத்துறப்போ,
கால் தடுக்கி விழுந்துபுட்ட
கண்ணீர வடிச்சுபுட்ட,
மார்போடு அணைச்சபடி உன்
உள்ளங்கையில் முத்தமிட்டேன்.
உன் வயசு - பதினாறு மாசம்.

கரும்பலக உலகத்தில
பல்பத்த வாளாக்கி
நாள் முழுக்க பயிற்சி செஞ்சு,
தமிழோட போர் கொண்டு
சந்தியில வீடு திரும்பயிலே,
காந்தமா என்ன ஒட்டிகிட்டு
கசங்கிய காகிதத்தில் மழலை தமிழில்,
"அப்பா"னு எழுதினியே
உன் கன்னத்தில் நான் முத்தமிட்டேன்.
உன் வயசு - ஆறு வருஷம்.

முழு பரீச்ச முடிவுல நீ
முதல் இடத்த புடிச்சுப்புட்டு
கோடை மழைச்சாரலிலே,
தெப்பமா நெனஞ்சபடி
மூச்சிரைக்க ஓடிவந்து,
என் காதோடு சேதி சொல்ல
உன் வேகத்த அதிகரிக்க,
மிதிவண்டி பரிசளிச்சேன்
தாவி வந்து நீ என்ன முத்தமிட்ட.
உனக்கு அப்ப பதிமூன்று வயசு.

பட்டணத்து வேலையில - நீ
ராப்பகலா உழைக்கிறப்போ - இரவு
பத்து மணி ரயில புடிச்சு
விடிகாலை வீடு வந்த,
நேற்றிரவு பேசயிலே
தகவலொன்றும் சொல்லலியே,
வீடு வந்த ராசாவுக்கு
என்னாச்சோனு கவலையானேன்,
உயிர் நண்பன் பிறந்தநாளுக்கு
பரிசளிக்க வந்தேன்னு,
என் கால் தொட்டு வணங்கிபுட்டு
வாழ்த்து சொல்லி சிரிச்சியே,
பிறவிப்பயன் அடஞ்சேன்யா
உன் கைகுலுக்கி நான் நெகிழயிலே,
வாழ்க்கையிலே உன் அனுபவம்
இருபத்திரண்டு வருஷமன்று.

தெய்வங்கள் கூலிகேக்கும் கலிகாலமிது
நெடுஞ்சாலை மட்டுமென்ன விதிவிலக்கா,
செல்வம் தந்த சாலையின்று மாறாக
என் செல்வத்த பலியாக எடுத்ததய்யா,
என் உசுருன்னு உன்ன சொன்னேனே
மிகையில்லை மகனே,
உன் விபத்து சேதி கேட்டதுமே
வெறும் நடமாடும் உடலானேன்,
என்ன சொல்லி வழியனுப்ப
நான் பெற்றெடுத்த தங்கத்த,
நிரந்தரமா தூங்கவைக்க
நெத்தியில முத்தம் வெச்சேன்,
கால் நூறு வருஷங்கள் நீ வாழ்ந்து முடிச்சுபுட்ட
இனி கால் நூறு வருஷத்துக்கு என்ன தவியா தவிக்கவிட்ட,
என் நெஞ்ச சிதறடிச்சு நீ அடஞ்சுபுட்ட மண்ண
இனி எந்த ஜென்மம் காண்பேனோ என் செல்லமே மீண்டும் உன்ன!!!


- தன் உயிருக்கும் மேலான மகனை ஒரு சாலை விபத்தில் இழந்து உடைந்து போன ஒரு தந்தையின் கண்ணீர் இந்த கவிதை!
என் வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதம் மிகுந்த மனிதர்களுள் ஒருவரான, வயதில் மூத்தவரான என் நண்பருக்கு இந்த கவிதை அர்ப்பணம்.
பிறப்பால் உண்டான பந்தங்கள் சிலவற்றை நான் துண்டிக்க - நானாக சென்று சேர்ந்த பந்தங்கள் சிலவற்றில் எங்கள் நட்பும் ஒன்று
.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

நிசப்தம் தேடி!!!

பெருத்துவிட்ட ஜனத்தொகை, உரசி செல்லும் வாகனங்கள்,சுவற்றுக்குள்ளே குதூகலம், மரங்கள் இல்லா வீடுகள், தூய்மை இல்லா காற்று, மனிதம் இல்லா மனிதர்கள், யுத்தபூமிபோல் சத்தம் - இவை வெறுத்த எனக்கு இந்த நிலை கெட்ட சந்தையில் நானும் ஒரு அங்கம் என்பதை நினைவூற்றிய இயற்கையுடன் நிகழ்ந்த என் அனுபவத்தின் எதிரொலி இந்த கவிதை.

பரபரப்பாய் பறக்குதய்யா
பட்டணத்து வாழ்க்கை,
இயந்திரமாய் சுத்துமிந்த
மனிதரெல்லாம் செயற்கை.

நேரமில்லை நேரமில்லை
யாவரும் சொல்லும் வழக்கு,
தன்னிலையை மறந்துவிட்டோம்
இது படைத்தவனுக்கோர் இழுக்கு.

ஆறறிவு ஜென்மமென்று
சொல்லில்மட்டும் பெருமை,
ஆனால் ஓரறிவும் முழுமையில்லை
இது காலப்போக்கின் கொடுமை.

நச்சு புகை மேகமாக
சூழுதய்யா வானை,
நாள் முழுதும் அணைத்துகொள்வோம்
செவியோடு செல்போனை .

சதுரடிக்கு நாலுபேரு
ஊர்ந்து செல்லும் வழக்கம்,
ஆனால் "நாமிருவர் நமக்கொருவர்"
இதை செயல்படுத்த ஏனோ தயக்கம்.

வீட்டிர்கோர் மரம் நடுவோம்
சொன்னதன்று அரசு,
இன்று வீட்டிர்கோர் பெட்டி வெச்சு
முழங்கும் தமிழ் முரசு.

தன்மானம் பெரும்பாலும் இருப்பதில்லை
நிதானம் என்ற சொல்லிர்க்கே இடமில்லை,
சுயநலம் ஒன்றும் பிழையில்லை
ஆனால் நலமென்று இங்கு ஏதுமில்லை.

நகர வாழ்க்கை நரகமாக
நிசப்தம் தேடி ஓடினேன்,
அனால் நிசப்தம் என்றால் என்னவென்று
கேலி பேசியது கான்க்ரீட் காடு.

மனிதர் முகம் வெருத்ததனால்
கடற்கரையில் தனித்திருந்தேன்,
கடல் நனைத்த ஈர மண்ணில்
விண்ணோக்கி படுத்திருந்தேன்.

சதிகாரன் புகை மண்டலம்
நட்சத்திரங்கள் விழுங்கியதால்,
எஞ்சியிருந்த ஓரிரண்டை
இமை மூடாது ரசித்திருந்தேன்.

கரை சேரும் அலை ஓசை
மன அலையை குறைக்க,
அலைகள் கரைந்த தருணத்தில்
நிசப்தம் - ஒரு நொடி சொர்க்கம்.

நிலவோடு காதல் கொள்ள
இரவோடு பேசியிருந்தேன்,
மேகத்தால் போர்த்திக்கொண்டு
முழுதாக மறைந்தால்.

கோபங்கள் ஏனென்று
வியப்போடு கேட்டேன்,
நம் உணர்வுகளின் ஒற்றுமையே
காரணமென்று சொன்னாள்.

வியப்புற்று எழுந்தேன்
சுற்றி சுற்றி பார்த்தேன்,
நிலவாலே மெய்யுனர்ந்தேன்
நானும் இந்த காட்டு வாசிதான்.

சனி, 3 அக்டோபர், 2009

தமிழ் துறவி!!!

கரை கண்ட கிளிஞ்சலாய் காலம் கண்டெடுத்த கிறுக்கன் நான்,

காலமகன் கண்கட்டி கண்ணாம்பூச்சி களித்திடுவேன்,

அலை ஓசை அமைதி கீதமாய் ஆஸ்கார்க்கு அனுப்பிடுவேன்,

சந்திரனை சலவை செய்து சந்திவான சாயமடிபேன்,

தென்றலுக்கு தபாலிட்டு தனிமைகளில் தலைகோதச் சொல்வேன்,

மழைச்சாரல் மனம்நனைக்க மண்வாசம் மதுவென்பேன்,

ஆற்றுத்தன்னி அறுந்தியதால் ஆக்வாபீனா அபத்தமென்பேன்,

பூமகளும் பூக்கயிலே புன்னகைப்பூ பரிசளிப்பேன்,

தனதென்று தான்சொல்ல தன்தலைகூட துணியவில்லை,
ஆனால்,
அண்டமெலாம் ஆண்டுவரும் அரசன்போலே ஆனந்தமாம்,


தனிமையிலே தப்பியெடுத்த தமிழ் துறவி நான்,

என் மதம் ஒன்று - அது மனிதம்,

என் இறை ஒன்று - அது இயற்கை.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

நான் நெகிழ்ந்த நொடிகள்!

சந்தி நேர வானம் - கூடு திரும்பும் பறவைகள்,

மலை நோக்கி நெடுஞ்சாலை - நான் மட்டும்,

நாயர் கடை பன் - தெருநாய் என் பங்காளி,

பாலைவன பயணம் - ஒற்றை மரத்தடி,

ஐந்து ரூபாய் மிட்டாய்க்கு - அனாதை சிறுமியின் முத்தம்,

ஒரு வார பயண முடிவு - வீட்டுக்குள் அணில் கூடு,

என் பிறந்தநாள் இனிப்பு - எறும்புகள் விருந்தாளிகள்,

சில்லென்ற சாரல் மழை - ஒரு கோப்பை தேனீர்,

ஆழமான நித்திரை - துயிலெழுப்பும் ஒற்றை மைனா,

இரவில் தனிமை - அலைபேசி துண்டிப்பு.